Friday 10 October 2014

3700 சிறுவர்களை அநாதைகளாக மாற்றிய எபோலா வைரஸ் : ஐ.நா தகவல்

         எபோலா வைரஸ் காரணமாக மேற்கு ஆபிரிக்க நாடுகளில் 3700இக்கும் அதிகமான சிறுவர்கள் பெற்றோர்களால் கைவிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியாவில் கடந்த பெப்ரவரி மாதம் பரவ ஆரம்பித்த எபோலா வைரஸ் அதன் அண்மித்த நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளிலும் பரவியதில் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கும் மேலாக எடுக்கப்பட்ட கணிப்பீடுகளின் இறுதி முடிவுகளின்படியே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் உயிரிழந்ததினால் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. மேலும் இந்தக் குழந்தைகளின் உறவினர்கள் தங்களின் பெற்றோர் உயிரிழந்தபோது வைத்தியசாலைகளிலேயே அநாதைகளாகக் காணப்படுவதாகவும், மூன்று வயதிலிருந்து சிறுவர்கள் இவ்வாறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எபோலா வைரஸ் காரணமாக இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கடந்த 26ஆம் திகதி வரை மேற்கு ஆபிரிக்க நாடுகளில் மாத்திரம் 6553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3083 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 சதவீதமாக காணப்பட்ட உயிரிழப்பு வீதம் தற்போது 50 சதவீதமாக காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.